கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி பிரதான சாலையில், ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இந்த ரேஷன் கடையில், சில தினங்களாக, ஒரு நபர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க, ரேஷன் கடை ஊழியர் மறுப்பதாகவும், மேலும், அந்த கார்டை கொடுத்து, 'சரண்டர்' செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
தனி நபர் ரேஷன் கார்டுகளை 'சரண்டர்' செய்து, அவரது மகன் அல்லது மகள் வைத்திருக்கும் குடும்ப அட்டையில், பெயரை இணைத்துக் கொள்ள , கடை ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர். பிள்ளைகள் திருமணத்துக்கு பின் தனியாக வசிக்கும் முதியோர் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.