-நமது நிருபர் குழு-
ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், கனிம வளக்கொள்ளைக்கு முதல்வர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கேரளாவில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, இயற்கை அமைப்பின் காரணமாக, எம்.சாண்ட், பி.சாண்ட், கட்டுமானத்துக்குத் தேவையான கல், செங்கல் என எதுவுமே அங்கு தயாரிக்கப்படுவதில்லை.
தமிழகத்திலிருந்து முறைப்படி அனுமதி பெற்று, இவற்றை கொண்டு போனால் பெரிய லாபம் பார்க்க முடியாது. அதனால் அனுமதியற்ற குவாரிகளிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மிதிக்கப்படும் விதிகள்!
பட்டா நிலங்களிலும் மூன்று மீட்டருக்கு மேல், மண் எடுக்கக்கூடாது என்பதைப் போல, குவாரிகளுக்கும் நிறைய விதிமுறைகளை, கனிம வளத்துறை விதித்துள்ளது.
ஆனால் அதீத லாபத்தைக் கருத்தில் கொண்டு, எல்லா விதிமுறைகளையும், சூழல் தன்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் அளவுக்கு, கொங்கு மண்டலப் பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய தாலுகாக்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களிலும், சட்டவிரோத குவாரிகள் இயங்கி வருகின்றன.
இவற்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில், கேரளாவுக்கு கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கட்டுப்பாடின்றி கடத்தப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாகத் தோண்டுவது, வெடி வைப்பது, ஒரு பர்மிட்டை வைத்துக் கொண்டு 10 லோடுகள் அடிப்பது, அனுமதித்த யூனிட்களை விட 3 மடங்கு ஏற்றிச் செல்வது என அத்தனை விதிமீறல்களும் நடக்கின்றன.
இவை எல்லாவற்றையும் விட, மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியிலுள்ள இந்த மாவட்டங்களின் சூழல் தன்மை, இந்த குவாரிகளால் முற்றிலும் சிதைக்கப்படுகிறது.
இந்த குவாரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, கனிம வளங்களைக் கொள்ளை அடித்துக் கடத்துவது, ஆளும்கட்சி ஆதரவு பெற்றவர்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆனாலும், வருவாய்த்துறை, கனிம வளத்துறை, காவல்துறை என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், லட்சங்களில் லஞ்சமும் வாரி வழங்கப்படுகிறது.
மாறிய ஆட்சி...மாறாத காட்சி!
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டையைச் சேர்ந்த கும்பல்தான், மாநிலம் முழுவதும் பரவலாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.
இப்போது அதே கும்பலை வைத்து, ஆளும்கட்சி மேலிடத்துக்கு நெருக்கமான பிரபல கவிஞர் ஒருவரின் பினாமிகள்தான், இந்த கனிம வளக் கொள்ளையை நடத்தி கோடிகளில் குவிக்கின்றனர்; அவர்களிடமிருந்து 'மேலிடத்துக்கு' பங்கு போகிறது என்பதுதான், இத்தொழில் பற்றி விபரமறிந்தவர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.
தமிழக முதல்வருக்குத் தெரிந்து இது நடக்கிறதா அல்லது அவரின் பெயரைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சிலர் இந்த கனிம வளக்கொள்ளையை நடத்தி, ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனரா என்பது சந்தேகமாகவுள்ளது.
ஆனால், ஆளும்கட்சி மேலிடத்தின் ஒப்புதலின்றி, லஞ்சத்துக்காக மட்டுமே, இவ்வளவு பெரிய அத்துமீறலை அதிகாரிகள் அனுமதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
தன்னுடைய அதிரடி உத்தரவு மற்றும் நடவடிக்கைகளால், முதல்வர்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்!
'ஆள் நியமித்து வசூலிக்கும் முதல்வர் குடும்பம்!'
''கோவையிலிருந்து மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. கோவையில் இருந்து ஒரு நாளைக்கு, 5,000 லோடு கனிம வளம், கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஆள் நியமித்து வசூலிக்கின்றனர். சாதாரண மக்கள், விவசாயிகள் மண் வாங்க, ஒரு லோடுக்கு ரூ.3,000 முதல், 4,000 லஞ்சம் தர வேண்டியுள்ளது.
கோவையில் உள்ள லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடிவதில்லை.
மற்றவர்கள் மண் எடுக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி தருவதில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து, முறையிட இருக்கிறோம்.
கேரள அரசே, அம்மாநிலத்தில் அனுமதி கொடுத்து, கனிம வளம் எடுத்துக் கொள்ளலாம். கோவையில் இருந்து சுரண்டி எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
கேரளாவுக்கு கனிம வளத்தை கடத்திச் செல்லக்கூடாது. விதிமீறலாக கனிம வளங்களை கடத்துவதை தடுத்து நிறுத்தாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்,''
-எஸ்.பி.வேலுமணி,
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க., மாநில அமைப்புச் செயலர்.
'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்!'
''மேற்குத் தொடர்ச்சி மலை, நம் தமிழகத்துக்குக் கிடைத்த இயற்கையின் பொக்கிஷம். அதைக் காப்பது, எதிர்காலத்துக்கான தமிழகத்தின் மடையைப் பாதுகாப்பதாகும். கோவையில் கனிம வளக்கொள்ளை நடப்பது குறித்த விவசாயிகளின் புகார்களை, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமான எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அதைத் தடுக்க வேண்டும். பத்திரிக்கைச் செய்திகளையும், விவசாயிகள் புகார்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது அவசியம். நாங்கள் எங்கள் கட்சியின் நிர்வாகிகளிடமும் இதுபற்றி விசாரித்து, கனிம வளக்கொள்ளை நடப்பதாக தெரிந்தால், நிச்சயம் குரல் கொடுப்போம்.
இதில் சூழல் பாதிப்பு என்பது முதலில் கவனிக்க வேண்டியது; அடுத்ததாக மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படுகிறது. அதனால் இது போன்ற விஷயங்களில், எவ்விதமான சமாதானத்துக்கும், பாரபட்சத்துக்கும் இடம் கொடுக்க முடியாது,''
-பி.நடராஜன்,
எம்.பி., - மா.கம்யூ., கோவை.
நமது நாளிதழில் நேற்று வெளியான, கனிமவள கடத்தல் செய்தியைக்கண்டு வெகுண்டெழுந்து விட்டார், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன். அவர் கூறியதாவது:
கோவையிலிருந்து 14 யூனிட் கொள்ளளவு கொண்ட வாகனங்களில், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் வீதமாக, ஒரு லோடுக்கு 5000 ரூபாய் மாமூல் வசூலிக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் லோடு கடத்தப்படுகிறது. இதன்படி, ஒரு நாளுக்கு இரண்டரை கோடி ரூபாய், ஆண்டுக்கு ரூ.912 கோடி, ஐந்தாண்டுக்கு ரூ.4560 கோடி மாமூல் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றைத் தவிர்த்து, மாவட்டத்துக்குள் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு, கிராவல் மண் கடத்தல் அதிகம் நடக்கிறது. மண், கல் தரும் நில உரிமையாளருக்கே ஒரு யூனிட்டுக்கு 300 ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனால், அனுமதியின்றி இவற்றைக் கொண்டு செல்வதற்கு, ஒரு லோடு கிராவலுக்கு ஒரு யூனிட்டுக்கு 500 ரூபாய் வீதம், 2000 ரூபாய் மாமூல் வாங்கப்படுகிறது.
இப்படி, மாவட்டத்துக்குள் தினமும் 400 லோடு கிராவல் விற்கப்படுகிறது. அந்த வகையில், தினமும் ரூ.80 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் மாமூல் வசூலிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஓராண்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் இதிலேயே வசூலாகிறது. இதில், அரசுக்குக் கிடைக்க வேண்டிய, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய், தனி நபர்களுக்குச் செல்கிறது.முதல்வர் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம், வரும் 8ம் தேதி போராட்டத்தை தொடங்குகிறது. மறுபடியும் இது தொடர்ந்தால், விவசாயிகள், மக்களைத் திரட்டி போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்; சட்டரீதியாகவும் இதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.