மதுரை : “ரயில்வே தொழிலாளர்கள் 1974ல் நடத்திய போராட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட வரலாறை ஒவ்வொரு தொழிலாளரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.ஆர்.எப்.,) தலைவர் ராஜா ஸ்ரீதர் பேசினார்.
மதுரையில் ஏ.ஐ.ஆர்.எப்.,ன் இணைப்பு சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் 1974ல் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நடந்தது.
இதில் ராஜா ஸ்ரீதர் பேசியதாவது: நாட்டில் ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் 1974ல் மிகப் பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் ஸ்டேஷனிலும், துப்பாக்கி சூட்டிலும், மதுரையில் நடந்த ரயில் மறிப்பு போராட்டத்தில் ரயிலில் அடிபட்டும் பலர் உயிர் தியாகம் செய்தனர். ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். 50 ஆயிரம் பேர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். 1975ல் அன்றைய காங்., ஆட்சியில் பிரதமர் இந்திரா கொண்டுவந்த அவசர நிலையால் 1977 வரை பேச்சு வார்த்தையும் நடத்த முடியாமல் தவித்தனர். 1977ல் இந்திரா ஆட்சி வீழ்ந்த பின் ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டது. அதில் ஏ.ஐ.ஆர்.எப்., தலைவர்களின் ஒருவரான மதுதண்டவதே ரயில்வே அமைச்சராகிய பின் தான் தொழிலாளர்களுக்கு விடிவு கிடைத்தது. அந்த போராட்டத்தின் தொழிலாளர்கள் செய்த உயிர் தியாகம் மூலமே இன்றைய போனஸ், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க காரணமாக இருந்தன. அவற்றை என்றும் நினைவில்கொள்ள வேண்டும் ,என்றார்.
கோட்ட செயலாளர் ரபீக், தலைவர் செந்தில் குமார், நிர்வாகிகள் சீதாராமன், சபரிவாசன், ஜூலியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓடும் தொழிலாளர்கள் பிரிவு கோட்ட செயலாளர் அழகுராஜா நன்றி கூறினார்.