விழுப்புரம்-பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 90.66 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 114 அரசு பள்ளி, 3 நகராட்சி பள்ளி, 5 ஆதிதிராவிடர் நல பள்ளி, 6 அரசு உதவி பெறும் பள்ளி, 9 பகுதி நிதியுதவி பெறும் பள்ளி, 9 சுயநிதி பள்ளி, 42 மெட்ரிக் பள்ளி, 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளி என மொத்தம் 189 பள்ளிகளைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 762 மாணவர்கள், 10 ஆயிரத்து 804 மாணவியர்கள் என மொத்தம் 21 ஆயிரத்த 566 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 9,366 மாணவர்கள், 10 ஆயிரத்து 186 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 552 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,014 பேர் தோல்வியடைந்தனர். இதன் மூலம் 90.66 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 1.42 சதவீதம் தேர்ச்சி குறைவு ஆகும்.
குறிப்பாக மாணவர்கள் 87.03 சதவீதமும், மாணவிகள் 94.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள் 88.14 சதவீதம்
மாவட்டத்தில் உள்ள 114 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 6,682 மாணவர்களில், 5,794 பேரும், 7,698 மாணவிகளில் 7,145 மாணவிகள் என 14,680 மாணவ, மாணவிகளில் 12 ஆயிரத்து 939 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் அரசு பள்ளிகள் அளவில் தேர்ச்சி சதவீதம் 88.14 ஆகும்.
மொத்தமுள்ள 189 பள்ளிகளில், 6 அரசுப் பள்ளிகள் உட்பட 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
33வது இடம்
ஒட்டுமொத்தமாக இந்தாண்டு 90.66 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 38 மாவட்டங்களில் 33வது இடத்தையும், அரசு பள்ளி அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 25வது இடத்தையும் விழுப்புரம் மாவட்டம் பிடித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டில் 86.36 சதவீதம், 2017-18ல் 83.35 சதவீதம், 2018-19ல் 85.85 சதவீதம், 2019-20ல் 86.98 சதவீதம், (2020-21ல் தேர்வு இல்லை), 2021-22ல் 92.08 சதவீதமும் தேர்ச்சி சதவீதம் இருந்த நிலையில், இந்தாண்டு 2022-23ல் 90.66 சதவீதமாக குறைந்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, கடந்த 2 ஆண்டுகளில் இடையே பள்ளிக்கு பலர் வராமல் இடை நின்றுள்ளனர். சுமார் 1,508 மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்கவில்லை, அதில் பொதுத் தேர்வில் 500 மாணவர்கள் வரை பங்கேற்காத நிலையில், இந்த தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக, மாவட்ட கல்வித் துறையினர் காரணம் கூறுகின்றனர்.
கலெக்டர் 'அட்வைஸ்'
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்கள், அடுத்து ஜூன் 19ம் தேதி நடைபெறும் உடனடி தேர்வில் பங்கேற்று, வெற்றி பெற்று, நடப்பு கல்வியாண்டில் கல்லுாரியில் சேர்ந்து, உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை பெறலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து, தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவதோடு, அன்பு காட்டி பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பழனி கேட்டுக் கொண்டார்.