பெங்களூரு-''பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக ராகுல் இருக்க முடியாது. நரேந்திர மோடி பிரதமரான பின், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை,'' என பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாநிலத்தில் பல பேரணிகளை நடத்தினர். இம்முறை 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீட்டை பா.ஜ., அரசு உயர்த்தி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மூழ்கும் கப்பல். காங்கிரசில் திறமையான தலைவர் இல்லை என்று தெரிகிறது. உத்தர பிரதேசத்தில் ராகுலும், பிரியங்காவும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிரசாரம் செய்தும், மூன்று, நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
பிரதமர் மோடிக்கு இணையாக ராகுல் இருக்க முடியாது. நரேந்திர மோடி பிரதமரான பின், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கிறோமோ, அதை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.