பெங்களூரு-பெங்களூரில் பிரதமர் மோடி மேற்கொண்ட பேரணிக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், தலா 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் செய்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்றும், நேற்று முன்தினமும் பெங்களூரில் பேரணி நடத்தினார். நேற்று முன்தினம் 26 கிலோ மீட்டர் துாரம் பேரணி மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது, காங்கிரஸ் புகார் அளித்தது.
புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:
பிரதமர் மோடியின் பேரணிக்காக, ஒவ்வொரு கிலோ மீட்டர் துாரத்திற்கும், தலா 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டதற்கு பா.ஜ., அனுமதி வாங்கியதா?
பேரணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து, பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன. இவற்றை கண்காணிக்க கர்நாடகா தேர்தல் அதிகாரிகள் தவறி விட்டனர்.
பல்லாரி பொதுக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, 'ஓட்டு வங்கிக்காக காங்., பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது' என, பிரதமர் மோடி பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.