தேர்தலுக்கு தேர்தல் தங்கவயலில் சில தலைவர்கள் இடம்மாறி வாக்காளர்களிடம் ஓட்டுக்கேட்பது வழக்கம். கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் பேசிய வார்த்தைகள் 2023 தேர்தலில் காற்றோடு கலந்தாச்சு.
நகராட்சி முன்னாள் தலைவர் தாஸ் சின்னசவரி:
2018: காங்கிரஸ் வேட்பாளர் ரூபகலா, 'பெண் சிங்கம்'. அவரை தேர்ந்தெடுங்கள்.
2023: மங்களகரமான அழகு முகம் கொண்ட பா.ஜ., வேட்பாளர் அஸ்வினியை தேர்ந்தெடுங்கள்.
நகர அபிவிருத்தி குழும முன்னாள் தலைவர் சம்பத் குமார்:
2018: தங்கவயலுக்கு கிடைத்த சந்தான லட்சுமி, அன்ன லட்சுமி, தானிய லட்சுமி, தனலட்சுமி, மஹாலட்சுமி, அஷ்ட லட்சுமி என பல லட்சுமி வடிவில் கிடைத்திருப்பவர் தான் காங்., வேட்பாளர் ரூபகலா.
2023: இவரது பேச்சையே காணோம்.
ம.ஜ.த., முன்னாள் தலைவர் பிரகாசம்:
2018: தங்கவயலின் ஒரே மக்கள் தலைவர் பக்தவச்சலம்.
2023: தங்கவயலில் மக்கள் போற்றும் ஒரே தலைவர் ரூபகலா.
நகராட்சி தலைவர் முனிசாமி:
2018: காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தங்கவயலை யாராலும் காப்பாற்ற முடியாது.
2023: தங்கவயலை வாழ வைக்க தாயுள்ளம் படைத்த ரூபகலாவை விட்டால் வேறு யாராலும் முடியாது.
அ.தி.மு.க., வேட்பாளர் மு.அன்பு
2018: தொடர்ந்து பொய்களை சொல்லியே மக்களை ஏமாற்றுகின்றனர். அதை நம்ப வேண்டாம். பொய்களை முறியடிக்க இரட்டை இலைக்கு ஓட்டு தாருங்கள்.
2023: மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தங்கவயலின் அவலத்தை போக்க தாமரைக்கு ஓட்டு அளியுங்கள்.
ஒன்று சேர்ந்த அதிருப்தியாளர்கள்:
2018: காங்கிரசுக்காக பாடுபட்ட நகராட்சி முன்னாள் தலைவர் தலைவர் முரளி, அமல் தாஸ், ஜெயபால், முத்து மாணிக்கம் இடையில், அதிருப்தியால் ஒதுங்கினர்.
2023: தேர்தலில் மீண்டும் ஒட்டிக்கொண்டனர். பிரசார பீரங்கியாக செயல்படுகின்றனர்.
பா.ஜ., வில் ஒதுங்கி இருந்த பா.ஜ., நகர முன்னாள் தலைவர்கள் வெங்கடேஷ், கோபால், மற்றும் நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் வக்கீல் திருவரங்கம், எட்வர்ட் சிகாமணி மற்றும் கணேஷ், ஜனார்த்தன், என பலரும் மீண்டும் கட்சிப் பணிக்கு திரும்பி விட்டனர்.
இடமாற்றம்:
ம.ஜ.த.,வில் இருந்த பலர் கூடாரத்தை காலி செய்துவிட்டு காங்கிரஸ், பா.ஜ., இ.கு.க., என பல கட்சிகளில் இடமாறி விட்டனர்.
பா.ஜ.,வில் இருந்த பல கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள், நகரப்பகுதியிலும் சிலர் காங்கிரசில் சேர்ந்து விட்டனர்.