கோவை : கோவை மாவட்டத்துக்கான அனைத்து விவசாயிகளிடமும், கொள்முதல் செய்ய இலக்கை அதிகப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், ஏப்.,1 முதல் விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தாண்டு, 22 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில், சூலுார் மையத்தின் இலக்கு முடிந்து விட்டதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மாவட்ட அளவில், 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு தென்னை விவசாயம் செய்வதால், கொப்பரை கொள்முதலுக்கான இலக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, விவசாயிகளிடம் எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., லீலாவிடம் முறையிட்டனர்.
அதன்பின், கூட்டமைப்பு இணை செயலாளர் பத்மனாபன், நிருபர்களிடம் கூறியதாவது:
தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு எலுமிச்சை விலை, 8 ரூபாய்; தேங்காய் விலையும், 8 ரூபாயாக இருக்கிறது. கொப்பரை தேங்காயை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் வருகின்றனர்.
குறித்த நேரத்தில் சாக்கு கிடைப்பதில்லை. இருப்பு வைக்க குடோன்கள் இருப்பதில்லை. கொள்முதல் செய்த கொப்பரைக்கு, 10 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.
கரும்பு, நெல்லை போல், ஆதார விலையுடன் கொப்பரைக்கும் கிலோவுக்கு ரூ.20 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.