சேலம்: சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 94.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் முன்னேறி, தற்போது, 18வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. சேலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம் (சேலம்), தங்கவேல் (சங்ககிரி) ஆகியோர் முடிவுகளை
வெளியிட்டனர்.
சேலம் மாவட்டத்தில், 323 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 17 ஆயிரத்து, 733 மாணவர்கள், 19 ஆயிரத்து, 528 மாணவிகள் என மொத்தம், 37 ஆயிரத்து, 261 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். நேற்று வெளியான தேர்ச்சி முடிவில், 16 ஆயிரத்து, 300 மாணவர்கள், 18 ஆயிரத்து, 809 மாணவியர் என மொத்தம், 35 ஆயிரத்து, 109 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டில், 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டில், 1.51 அதிகமாக, 94.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு மாநில அளவில், தேர்ச்சி
பெற்றோரில் சேலம் மாவட்டம், 23 வது இடத்தை பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டு ஐந்து இடங்கள் முன்னேறி, 18 வது இடத்தை
பெற்றுள்ளது.
மாவட்டத்தில் 112 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 112 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள, 323 மேல்நிலைப்பள்ளிகளில், 15 அரசு பள்ளிகள், ஏழு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 90 சுயநிதி பள்ளிகள் என, 112 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள் விபரம்:அபினவம் ஏகவலைவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகல்பட்டி அரசு பள்ளி, தேடாவூர், ஏற்காடு, அருநுாத்துமலை அரசு மேல் நிலைப்பள்ளி, மாவட்ட அரசு மாதிரி பள்ளி ஆகியன, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. சங்ககிரி கல்வி மாவட்டத்தில், செட்டிப்பட்டி, சாணாவூர், வெள்ளேரிவேலி, இடைப்பாடி, காடையாம்பட்டி, கொங்கணாபுரம், சங்ககிரி, வீரபாண்டி தாரமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில், 15 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஏற்காடு மான்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அதே பகுதியில் உள்ள நாசரேத் மேல்நிலைப்பள்ளி, சேலம் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி என ஏழு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உட்பட, 112 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சிறை கைதிகள்
ஏழு பேர் தேர்ச்சி
சேலம் மத்திய சிறையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய, ஒன்பது கைதிகளில், ஏழு பேர் தேர்ச்சி பெற்றனர்.
சேலம் மத்திய சிறையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து, 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த, மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, ஒன்பது கைதிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஏழு பேர் தேர்ச்சி பெற்றனர். இருவர் தோல்வியை
தழுவினர்.
தேர்வு எழுதியவர்களில், ஆயுள் தண்டனை கைதி
முகம்மது இப்ராகிம், 500க்கு 437 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,
தினேஷ்குமார், 428 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், இளவரசன், 411 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இவர்களை, சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் வெகுவாக
பாராட்டினார்.