ஓசூர்: ஓசூரில், 'அஸ்பாரகஸ்' விவசாயம் செய்து வரும் விவசாயிகள், நிலையான வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, சித்தனப்பள்ளி சுற்று வட்டாரத்தில், 'அஸ்பாரகஸ்' என்ற பல்வேறு சத்துக்கள் மற்றும் மருத்துவ குணமுடைய காய்கறியை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இவற்றை ஒருமுறை பயிர் செய்தால், நான்கு ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம் என்பதால், விவசாயிகள் ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர்.
இதன் விதைகளை பெற்று, நர்சரிகளில் வளர்த்து நிலங்களில் நட்டு, 6 மாதங்கள் பராமரித்த பின்தான், 'அஸ்பாரகஸ்' தண்டுகளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் பயிரிட்டு, 6 மாதங்கள் பராமரிப்பு செய்ய, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. வெளிநாடுகளில் ஆண்டு முழுவதும், 'அஸ்பாரகஸ்' காய்கறிக்கு தேவை உள்ளதால், அதன் விலையும் ஓரளவிற்கு நிலையாக இருக்கிறது.
தினமும், ஒரு ஏக்கரில், 40 முதல், 60 கிலோ வரை, 'அஸ்பாரகஸ்' தண்டுகளை அறுவடை செய்ய முடியும். அவற்றை மூன்று ரகமாக பிரித்து, வியாபாரிகள் மூலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். முதல் ரகம், 150 முதல், 200 ரூபாய்க்கும், இரண்டாவது ரகம், 100, மூன்றாவது ரகம், 50 ரூபாய் என விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. விவசாயிகள் சிலர், வியாபாரிகள் தலையீடின்றி நேரடியாக ஏற்றுமதி செய்வதால், ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, நிரந்தர வருமானம்
பெறுகின்றனர்.
தக்காளி போன்ற பயிர்களை சாகுபடி செய்து, நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு மத்தியில், சித்தனப்பள்ளி விவசாயிகள், 'அஸ்பாரகஸ்' சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, தோட்டக்கலைத்துறை, இதுபோன்ற காய்கறி சாகுபடியை, விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.