வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வரும் 15ல், ஒரத்தநாட்டில் பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டமும், சென்னையில் பன்னீர்செல்வம் - சசிகலா சந்திப்பும் நடக்க உள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி பொறுப்பேற்றதும், அ.ம.மு.க., கூடாரத்தை காலி செய்யும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிளை இழுக்க, தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனின் வலது கரமாகவும், மாவட்ட செயலராகவும் இருந்த மா.சேகர், அ.தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்.
![]()
|
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.ம.மு.க., பொருளாளருமான மனோகரனும், அ.தி.மு.க.,வுக்கு தாவினார். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் இணையும் பொதுக்கூட்டத்தை, பிரமாண்டமாக நடத்த வேண்டும் என, பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, வரும் 15ம் தேதி, ஒரத்தநாட்டில் மா.சேகர் ஏற்பாடு செய்கிற பொதுக்கூட்டத்தில், பழனிசாமி பங்கேற்கிறார்.
|
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் ஒரத்தநாடு. மேலும், சசிகலா, தினகரனுக்கும் அந்த பகுதியில் ஆதரவு அதிகம். அம்மாவட்டத்தில் தன் செல்வாக்கை நிரூபிக்க, பழனிசாமி விரும்புவதால், அங்கு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நாளில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டில், சசிகலாவை சந்தித்து, பன்னீர்செல்வம் பேச உள்ளார். இந்த சந்திப்புகளுக்கு பின், அடுத்த கட்டமாக பன்னீர்செல்வம் நடத்த உள்ள, கொங்கு மண்டல மாநாட்டில், தினகரனும், சசிகலாவும் பங்கேற்க உள்ளனர்.