வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை, ரயில்களில் அழைத்துச் செல்ல வசதியாக, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், டிக்கெட் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.
ரயில் பயணத்துக்கு, 82 சதவீதம் பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர, ஆம்னி பஸ்கள் டிக்கெட் முன்பதிவு, உணவுகள் 'ஆர்டர்' செய்வது, ஓய்வு அறைகள், 'வீல் சேர்' முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற பயன்படுத்துகின்றனர்.
நாய், பூனை, பறவை போன்ற செல்லப் பிராணிகளை, ரயில்களில் ஏற்றிச் செல்லும் வசதி இருக்கிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், அதற்கான முன்பதிவு வசதி இல்லை. பயணியரின் கோரிக்கையை ஏற்று, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், டிக்கெட் முன்பதிவு வசதியை உருவாக்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வேயில், யானைகள், குதிரைகள், கழுதைகள், செம்மறி ஆடுகள், நாய்கள், பிற விலங்குகள், பறவைகள் போன்றவற்றை, ரயில்களில் ஏற்றிச் செல்லலாம். மற்ற விலங்குகளை காட்டிலும், வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களை, பயணியர் ரயில்களில், தங்களுடன் அழைத்து செல்ல விரும்புகின்றனர். இருப்பினும், சில கட்டுப்பாடுகள் உள்ளன.
செல்ல நாய்களை முதல், 'ஏசி' வகுப்பிலும்; ரயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ், லக்கேஜ் மற்றும் பிரேக் வேனிலும் ஏற்றிச் செல்ல பதிவு செய்யலாம். பயணியர் தங்கள் பயணிக்கும் பெட்டியில், நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், 'ஏசி' முதல் வகுப்பு, கூபேயில் தங்குமிடத்தை பிரத்யேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். பயணியரின் ஒரு பி.என்.ஆரில், ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும்.
டிக்கெட் முன்பதிவு வசதி, இரண்டு மாதங்களில் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் ஏற்படுத்தப்படும். அதில், எந்தெந்த ரயில்களில் இந்த வசதி உள்ளது, அதற்கான விதிமுறைகள் என்ன, கட்டணம் எவ்வளவு போன்ற விபரங்கள் இடம்பெறும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.