வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. 'நிலையற்ற பாகிஸ்தான் என்பது நமக்கு ஆபத்தானது' என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
ஊழல் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, 'ரேஞ்சர்ஸ்' எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் நீதிமன்ற ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து அதிரடியாக கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இம்ரானின் ஆதரவாளர்கள், அந்நாட்டின் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென, ராணுவ தலைமையகத்தின் பிரதான வாயிற்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறுகையில், 'ஒரு நிலையற்ற பாகிஸ்தான் என்பது நமக்கு ஆபத்தானது. நமது துணை கண்டத்தில் உள்ள நாடு அமைதியுடன் கூடிய நிலையானதாக இருக்க வேண்டும். அந்த நாடு நல்லபடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நமது அண்டை நாட்டினருக்கு சிறப்பான மற்றும் அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்' என்றார்.