பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) இன்று (மே 10) ஜன., - மார்ச் காலாண்டின் நிகர லாபத்தை ரூ. 3,987 கோடியாக பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,621 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.58,335 கோடியாக இருந்தது. இதுவும் முந்தைய ஆண்டின் வருவாயான ரூ.52,851 கோடியிலிருந்து 10 சதவீதம் அதிகம் ஆகும். மார்ச் காலாண்டு வாருவாயில் சர்வதேச திட்டங்களின் பங்கு 39 சதவீதமாக இருந்தது என நிறுவனம் பங்குச்சந்தைக்கு தந்துள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளது.
மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஆர்டர் வரத்து ரூ.76,099 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 3 சதவீதம் வளர்ச்சி ஆகும். சர்வதேச ஆர்டர்கள் ரூ.36,046 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு மார்ச் 31, 2023 நிலவரப்படி ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதுவும் 12% அதிகம். இதில் சர்வதேச ஆர்டர்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என்று எல்&டி தெரிவித்துள்ளது.
![]()
|
இருப்பினும் இந்த வருவாய் மற்றும் லாபம் நிபுணர்களின் கணிப்பை விட சற்றே குறைந்துள்ளது. பங்குச்சந்தை நிபுணர்கள் மார்ச் காலாண்டில் எல்&டி.,யின் ஒருங்கிணைந்த வருவாய் 11 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என கணித்திருந்தனர். நிகர லாபம் ரூ.4,100 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
தற்போது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஒரு பங்கிற்கு ரூ.24 இறுதி டிவிடெண்ட் தொகையாகப் பரிந்துரைத்துள்ளது. புதன் (மே 10) நிலவரப்படி எல்&டி பங்கு ஒன்றின் விலை ரூ.2,372 ஆக முடிவடைந்தது. இந்த விலையில் டிவிடெண்ட் ஈல்டு விகிதம் 1% ஆகும். அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1,000 மட்டுமே டிவிடெண்ட் ஆக கிடைக்கும்.