வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆடியோ சர்ச்சையில் சிக்கிய மதுரையை சேர்ந்த பழனிவேல் தியாகராஜன் இன்று நிதி அமைச்சர் பதவியை இழந்தார். இவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல்வர் குடும்பத்தினர் சம்பாதித்த 30 ஆயிரம் கோடி சொத்துக்களை காப்பாற்றவே சிரமப்படுகின்றனர் என்று பழனிவேல்தியாக ராஜன் பேசிய ஆடியோ வைரலானது. இதனையடுத்து அவரது நிதி துறை பறிக்கப்படலாம் என்று பேசப்பட்டது இன்று உறுதியானது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதன் முதலாக அமைச்சர் பதவியில் இருந்து, நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றார்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போதே, அவர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், டெல்டா மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு காரணமாக, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அதிருப்தி
டெல்டா மாவட்டத்தில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாததால், அமைச்சர் இல்லாத மாவட்டமாக இருந்தது. இது, அப்பகுதி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க., பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, தன் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.,வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு, அமைச்சர் பதவி வழங்கும்படி, முதல்வருக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். கடந்த 2022 டிசம்பரில் உதயநிதி அமைச்சரானபோது, இவரும் அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், கிடைக்கவில்லை.
எனினும், டி.ஆர்.பாலுவை சமாதானப்படுத்த, அவரது மகனுக்கு கட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பதவி வழங்கப்பட்டது. அதில் அவர் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக்கப்படும் தகவல் நேற்று முன்தினம் இரவு அதிகாரப்பூர்வமாக வெளியானதும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவையாறு துரை சந்திரசேகரன் நான்காவது முறையாகவும், கும்பகோணம் அன்பழகன் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். திருவாரூர் பூண்டி கலைவாணன் இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,வாகவும், மாவட்ட செயலராகவும் உள்ளார். இவர்கள் மூவரும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு வழங்காமல், கட்சியில் இளையவரான டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டதால், டெல்டா மாவட்ட எம்.எல்.ஏ.,க்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.
இதில், பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். 'திருவாரூர் மாவட்டத்தை, தி.மு.க., கோட்டையாக மாற்றி, கட்சிக்கும், மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பூண்டி கலைவாணனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும். 'கட்சிக்காக நாங்கள் இல்லை; கலைவாணனுக்காக மட்டும் தான் கட்சியில் இருக்கிறோம்' என, பல இடங்களில் 'போஸ்டர்' ஒட்டியுள்ளனர்.
சமாதானம்
இதையறிந்த டி.ஆர்.பாலு உடனடியாக டெல்டா மாவட்ட மூத்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி உள்ளார். அதனால், டி.ஆர்.பி.ராஜா விவகாரத்தில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதிய அமைச்சர் பதவியேற்புடன், சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றவும் முதல்வர் முடிவு செய்திருந்தார். இதற்கு மூத்த அமைச்சர்கள் உடன்படவில்லை. 'இலாகா மாற்றம், கட்சியிலும், ஆட்சியிலும் பல பிரச்னைகளை உருவாக்கும்' என, முதல்வரிடம் அவர்கள் எச்சரித்தனர்.
அதை ஏற்க மறுத்த முதல்வர், எதிர்ப்புக் கொடி துாக்கிய மூத்த அமைச்சர்களிடம் தனித்தனியாக பேசி சரிகட்டினார்.
அதேபோல், அமைச்சர் பதவி எதிர்பார்த்து கிடைக்காமல் போனதால், அதிருப்தியில் உள்ள சீனியர் எம்.எல்.ஏ.,க்களிடமும் பேச்சு நடத்தப்பட்டது. அதன் பின்னரே, அமைச்சர்களின் இலாகா மாற்றம் உறுதியானது.
அமைச்சர் பதவியேற்பு விழா, இன்று காலை 10:30 மணிக்கு, ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடந்தது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவுக்கு, கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு தங்கம் தென்னரசு வகித்த தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறையும்
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
மகனுக்கு பதவி தந்தைக்கு பறிப்பா?
தி.மு.க., பொருளாளராகவும், லோக்சபா தி.மு.க., தலைவராகவும் இருப்பவர் டி.ஆர்.பாலு. மத்திய அமைச்சராக, நான்கு முறை பதவி வகித்த பாலு, தற்போது ஸ்ரீபெரும்புதுார் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இவரது மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.,வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., அமைச்சரவையில் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மகேஷ், மூர்த்தி என, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக உள்ளனர். அந்த பட்டியலில், டி.ஆர்.பி.ராஜாவும் சேர்ந்துள்ளதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 13 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், ஐந்து பேர் அமைச்சர்கள் என்றளவுக்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், அவரது தந்தையான டி.ஆர்.பாலுவுக்கு, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. அந்த நிபந்தனையை கட்சி மேலிடம் விதித்துள்ளதாகவும், அதற்கு பாலு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.