மாண்டியா: தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட சேலை, கோழி உள்ளிட்ட பொருட்களை, பா.ஜ., அலுவலகத்தில் கிராமத்தினர் வீசி எறிந்தனர்.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டையில் பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நாராயண கவுடா போட்டிஇடுகிறார். சமீபத்தில் வாக்காளர்களை கவரும் வகையில், தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் பா.ஜ., சார்பில் இலவச சேலைகள், கோழிகளை வழங்கினர். இதனால் கோபமடைந்த அக்கிராமத்தினர், அவருக்கு புத்தி புகட்ட நினைத்து, ஓட்டுப்பதிவு நாளான நேற்று அவரது வீட்டில் சேலைகளை பெண்கள் வீசி எறிந்தனர்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சேலைகள், கோழிகளை வீசி எறிந்த அவர்கள், 'நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களுக்கு உங்களின் பரிசு பொருட்கள் தேவையில்லை. நாங்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட மாட்டோம்' என கூறியபடி சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.