அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்மீது இதுவரை 19 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் ஜீன் கரோல் என்கிற 79 வயதான, டிரம்ப்பைவிட மூன்று வயது மூத்த பெண் ஒருவர் டிரம்ப் தன்னை வன்புணர்வு செய்ய முயன்றதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வழக்கில் தற்போது டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது ஜீன் கரோலின் வரலாற்றை சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ஜீன் கரோல் என்கிற பத்திரிகையாளர் நியூயார்க்கைச் சேர்ந்தவர். 1994-1996 வரை இவர் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நடத்திய நீயா நானா போன்ற செய்தி விவாத ரியாலிட்டி ஷோ, ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது. எல்லே என்கிற இதழில் ஜீன் எழுதிய கட்டுரை அதிக வரவேற்பு பெற, தொடர்ந்து அவர் தனது கருத்துகளை அந்த இதழில் பல ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்தார்.
![]()
|
நாட்டின் அரசியல், பொருளாதாரம் துவங்கி சினிமா, ஆடைகள் என பல விஷயங்களை அவர் தனது கட்டுரைகளில் ஆராய்ந்தார். ஜீனின் வார்த்தைத் தேர்வு, எழுத்து நடை, சமூகப் பார்வை ரசிகர்களுக்குப் பிடித்துப்போக, அமெரிக்க பத்திரிகை உலகில் தனக்கென ஓர் தனி இடத்தைப் பிடித்தார் ஜீன். 80 மற்றும் 90-களில் திறமை, கவர்ச்சி இரண்டும் ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் எனப் பெயர் பெற்றவர் ஜீன்.
90களில் அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழிலில் ஜாம்பவானாக விளங்கியவர் டிரம்ப். அப்போது பல பெண்களோடு டேட்டிங் செய்து வாழ்க்கையை உல்லாசமாகக் கழித்தார் டிரம்ப். ஜீனின் கட்டுரை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் கவரப்பட்ட டிரம்ப், ஜீன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்து, அவரிடம் பழகினார். குறுகிய காலத்தில் இருவரும் நண்பர்களாகி விட்டனர்.
இப்போது டிரம்ப் மீதான ஜீன் தரப்பு பாலியல் குற்றச்சாட்டு குறித்துப் பார்ப்போம்.
90-களில் மன்ஹாட்டனில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஜீனை சந்தித்த அவரது நண்பர் டிரம்ப், தனது காதலி ஒருவருக்கு காதல் கடிதம் எழுத உதவுமாறு ஜீனைக் கேட்டுக்கொள்ள, உடனே சம்மதித்தார் ஜீன். துணிக்கடையில் கவர்ச்சிகரமான ஆடை ஒன்றை வாங்கி ஜீனுக்குப் பரிசளித்த டிரம்ப், டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்று ஆடையை அணிந்து வரக் கோரினார். ஜீன் இதற்கு சம்மதித்து ஆடையை எடுத்துக்கொண்டு ட்ரெஸ்ஸிங் அறைக்குச் செல்ல, பின்தொடர்ந்து வந்த டிரம்ப், ஜீன் உள்ளே நுழைந்ததையடுத்து தானும் அந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டார்.
டிரம்பைக் கண்டு பீதியடைந்த ஜீன் சுதாரிப்பதற்குள் பலவந்தமாக ஜீனை டிரம்ப் சுவரில் மோதித்தள்ளி அவரது கைகளைக் கொண்டு ஜீனை சிறைபிடித்தார். ஜீன் பலம்கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஜீனின் இதழில் முத்தமிட முயன்ற டிரம்ப், அவரது உள்ளாடைகளைக் களைந்து உறவு கொள்ள முயன்றார். கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் போராடிய ஜீன், சட்டென தனது தொடையைக் கொண்டு டிரம்பைத் தாக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு கதவைத் திறந்து வெளியே ஓடினார். இச்சம்பவத்தை அடுத்து தான் உடலுறவையே வெறுத்து இன்றுவரை ஆண்கள் மீது நாட்டமின்றி இருப்பதாக ஜீன் கூறியுள்ளார்.
மார்கெட் இழந்த பத்திரிகையாளரான ஜீன், பணத்துக்காக தன்மீது அபாண்டமாகப் பழி சொல்கிறார். அவர் சொல்வது முழுக்க முழுக்க கட்டுக்கதை என டிரம்ப் தனது தரப்பு வாதத்தைத் தெரிவித்தார். இரு தரப்பினரின் வாதத்தை முன்னதாக விசாரித்தது மன்ஹாட்டன் மாகாண நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை அளித்தது.
இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். ஜீனின் குற்றச்சாட்டு உண்மையானது என்றும், ஜீனை பலவந்தப்படுத்த முயன்றதற்காக டிரம்ப் ஐந்து மில்லியன் டாலர் தொகையை ஜீனுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.