ஊத்துக்கோட்டை:கோடை காலம் துவங்கிய நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தளவு இருந்தது.
இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் தோன்றியது. இதனால், கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீர் திறந்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கை கால்வாய் வழியே, கடந்த 3ம் தேதி முதல் கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது.
துவக்கத்தில் வினாடிக்கு, 10 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது தற்போது கூடுதலாக வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 320 கன அடி நீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., நீரில் தற்போது ஒரு டி.எம்.சி., மட்டுமே உள்ளது.
மொத்த நீர்மட்டமான, 35 அடியில், தற்போது 26.19 அடி நீர் உள்ளது. இங்குள்ள இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 250 கன அடி நீர் திறக்கப்பட்டு, சென்னை புழல் ஏரிக்கு சென்று கொண்டு இருக்கிறது.