தேவிபட்டினம்: மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் அருகே புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஏற்பாடுகள் நேற்று காலை துவங்கின.
இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் ரேஷன் கடையை 1வது மற்றும் 2 வது வார்டு பகுதியில் மையமாக அமைத்தால் அனைத்து மக்களும் சமமாக வாய்ப்பு பெற முடியும் என்று கூறியும், ஊராட்சி அலுவலகம் அருகே அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் கோகிலவாணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டு, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. மாற்று இடத்தில் கடை அமைப்பதில் சிக்கல் உள்ளது என்று தெரிவித்தார். பொதுமக்கள் சமாதானம் அடையாததால் பூமி பூஜை நிறுத்தப்பட்டது.