உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் மாற்றுத்திறனாளி கணேசன் 60, பலமுறை மனு அளித்தும் மூன்று சக்கர வாகனம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பால் வாடகை வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்.
-உத்தரகோசமங்கை தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் 60. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய் பாதிப்பால் இடது கால் செயலிழந்தது. கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய மூன்று சக்கர சைக்கிள் வேண்டி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
கணேசன் கூறியதாவது: இடது கால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. உத்தரகோசமங்கையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்ததால் அவரது மூன்று சக்கர சைக்கிளை வாடகை கொடுத்து பயன்படுத்தி வருகிறேன்.
ராமநாதபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பஸ்சில் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே பலமுறை சென்று மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும், என கண்ணீர் மல்க தெரிவித்தார்.