சென்னைசென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரி அல்லது போலீஸ்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நட்சத்திர காவல் விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, 5,000 ரூபாயும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாத நட்சத்திர காவல் விருதுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரான, சார்லஸ் சாம்ராஜதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை நேற்று, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து, 5,000 ரூபாய் வெகுமதியும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
இதுகுறித்து, சார்லஸ் சாம்ராஜதுரை கூறியதாவது:
காவல் துறையில், 28 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். 2004ல் வீரப்பனை சுட்டு வீழ்த்தியதற்காக வீரப்பதக்கமும், 2010ல் சிறந்த வழக்கு புலனாய்வுக்கான விருதும், 2020ல் ஜனாதிபதி விருதும் வாங்கினேன்.
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றுவோரை தேர்ந்தெடுத்து, விருதுகள் வழங்கி கவுரவிப்பதை, போலீசார் வரவேற்கின்றனர். நட்சத்திர காவல் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.