உடுமலை:புதிய கல்வியாண்டுக்கு தயாராகும் வகையில், உடுமலை பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி திறப்புக்கு இன்னும், மூன்று வாரங்கள் உள்ளன. இருப்பினும், பத்து நாட்களில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, அட்மிஷன் உள்ளிட்ட பணிகள் உள்ளன.
இதனால், அரசுப்பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணியை, பொதுநிதியைக்கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி நுழைவு வாயில், சுற்றுச்சுவர், மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நுாலகம், ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றில் கட்டடங்கள் பழுது ஏற்பட்டிருந்தால், சரி செய்யப்படுகிறது.
பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர, மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.