திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் நுாற்றுக்கு மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனை அகற்றக்கோரி சில தனிநபர்கள் நீதிமன்றம் நாடியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று உளுந்துார்பேட்டை நிர்வல ஆதாரத்துறை அதிகாரிகள் 121 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முற்பட்டனர்.
அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருக்கோவிலுார் ் - கள்ளக்குறிச்சி சாலையில் அமர்ந்து காலை 10:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் பாபு, தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.