போடி:போடியில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் 4 வது தெருஏலக்காய் வியாபாரி பாலசுப்பிரமணியன் மனைவி வெண்ணிலா 72. இவர் நேற்று காலை இங்கு 5வது தெருவில் உள்ள மகன் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து வந்தார். பின்தொடர்ந்து வந்த இருவர் வெண்ணிலாவை வழிமறித்து, 'தங்களை போலீஸ் அதிகாரிகள். ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளோம்,' எனக்கூறி நம்ப வைத்துள்ளனர்.
அப்போது 'அதிகமாக நகை போட்டு தெருவில் சென்றால் திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள் என்று கூறி வெண்ணிலா அணிந்திருந்த 12 பவுன் தங்க தாலி செயின், கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல்களையும் கழற்றி பேப்பரில் மடித்து பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் 'என கூறி பேப்பரையும் வழங்கினர். இதனை நம்பிய மூதாட்டியிடம் நகைகளை பேப்பரில் மடித்து தருவது போல் போக்கு காட்டி ஏற்கனவே தயாராக மடித்து வைத்திருந்த காகித பொட்டலத்தை கொடுத்து விட்டு நகையுடன் இருவரும் தப்பினர்.
வீட்டிற்கு வந்த மூதாட்டி பொட்டலத்தை பிரித்த போது அதில் கற்களையும், பித்தளை செயினையும் வைத்து ஏமாற்றியது தெரிந்தது. போடி போலீசார் விசாரிக்கின்றனர்.