கடலுார்: தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் பாரதி சாலையில் உள்ள நியுசினிமா தியேட்டரில் பொன்னியின் செல்வன் -2, என்ற திரைப்படம் நேற்று பிற்பகல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. மாலை 4:30 மணியளவில், புரொஜக்டர் அறையில் உள்ள 'ஏசி' யில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள துவாரம் வழியாக பார்வையாளர்கள் அரங்கில் புகை மூட்டம் பரவியது. அதிர்ச்சியடைந்த படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
உடன், தியேட்டர் ஊழியர்கள், தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைத்தனர். படக்காட்சி ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்டது. மாலை நேரக் காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
தகவலறிந்த கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், 'ஏசி' யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.