புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு நிர்வாகம் செய்ய தெரியாது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.இது குறித்து அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் கடந்த காலங்களில்கவர்னர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். மத்திய அரசு மாநில அரசு கேட்ட நிதியை வாரி வழங்கியதால்,எந்தவித சிரமம் இன்றி ஆட்சி நடந்தது.
கடந்த 2016ம் ஆண்டு காங்., தி.மு.க., ஆட்சியில் கவர்னராக பதவி வகித்த கிரண்பேடி விதிமுறைகள் மீறிஅரசின் நிர்வாகத்தில் தலையிட்டு வளர்ச்சி திட்டங்களை முடக்கியதால், நீதிமன்றம் சென்றோம் என்பதை முதல்வர்தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் சட்டம் படித்தவர். எங்களது சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டை படித்து பார்க்க வேண்டும்.
அரசு நிர்வாகத்தைதிரைமறைவில் நடத்த முடியுமா. முதல்வர் ரங்கசாமிக்கு நிர்வாகம் செய்ய தெரியாது. நிதித்துறை ஒப்புதல் இன்றி திட்டங்களை அறிவிக்கிறார். கோப்புகள் திரும்பினால் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என பழிபோடுகிறார்.
அதிகாரிகள் காட்டும் கோப்புகளுக்கு கையெழுத்து போடுபவர்.ஒத்துவரவில்லை என ஏற்கனவே இருந்த தலைமை செயலரை மாற்றினர். தற்போதுள்ளதலைமை செயலரை மாற்ற கோரிக்கை வைக்கிறார்.
பா.ஜ., என்.ஆர்.காங்., இடையே சுமூக உறவு உள்ளதா, மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். எங்கள் மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தை சரியாக நடத்தி,மாநில வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கவர்னர் தமிழிசை, விழுப்புரம் எம்.பி. குறித்து எதுவும் கூறவில்லை என அந்தர்பல்டி அடித்துள்ளார்.இருமாநில கவர்னராக இருந்து கொண்டு தமிழக அரசியலில் குறித்து ஏன் பேச வேண்டும்.
அரசு திட்டத்தை முதல்வர் அறிவிக்க வேண்டும். ஆனால் இங்கு கவர்னர் அறிவிக்கிறார். அதனால் கவர்னர் முதல்வரின் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டு, முதல்வரை செயல்பட விடாமல் செய்கிறார்.கவர்னர் பொறுப்புடன் பேசுவதுடன் செயல்படவும் வேண்டும்.
இவ்வாறு அவர், கூறினார்.