திருக்கனுார்: செல்லிப்பட்டு மாற்றுப் பாதையில் கோதுமை ஏற்றி வந்த லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதித்தது.
திருபுவனை தொகுதி செல்லிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித் துறை மூலம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, செல்லிப்பட்டு சாராயக்கடை எதிரே மெயின் ரோட்டின் குறுக்கே சிறிய பாலம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.
இதையடுத்து, அப்பகுதியில் மண் கொட்டி மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதை சரியாக அமைக்காததால், அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணி அளவில் அவ்வழியாக கோதுமை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, மாற்று பாதையின் நடுவே மண்ணில் சிக்கியது.
இதனால், அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கோதுமை லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இதனால் பத்துக்கண்ணு, செல்லிப்பட்டு வழியாக சோரப்பட்டு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.