மலுமிச்சம்பட்டி;மலுமிச்சம்பட்டி பஞ்.,க்குட்பட்ட அன்பு நகரில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 10 நாட்களுக்கு ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. நேற்று காலை, 20 பெண்கள் உட்பட, 40 பேர், தேசிய நெடுஞ்சாலையில், மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பு அருகே மறியலுக்கு கூடினர்.
தகவலறிந்த செட்டிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., சரவணன் பேச்சுவார்த்தைநடத்தினார்.
அங்கு வந்த மதுக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன், அரசு போக்குவரத்து கழக உக்கடம் கிளை மேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம், 'குடிநீர் குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக வினியோகம் செய்ய வேண்டும். பஸ் வசதியை அதிகப்படுத்த வேண்டும்.
தெரு மின் விளக்குகள், மின் மோட்டார்களை சீரமைக்க வேண்டும்' என மக்கள் கோரினர்.
குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். மக்கள், மறியல் முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர்.