கோவை;கட்டுமானப்பணிகளுக்கு, ஒற்றைச்சாளர முறையை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர் ஐயப்பன் ஆகியோர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, கட்டட கட்டுமானப்பணிகளுக்கான பணிகளை நிறைவு செய்ய, ஒற்றைச்சாளர முறையை பின்பற்றினால், ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளையும், டெவலப்பர்ஸ் சந்தித்து பேசி பயன்பெற முடியும். வாடிக்கையாளர்களின் பணம், நேரம், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கால விரயத்தை தவிர்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மின் மற்றும் தொழிற்சாலை திட்டங்கள் உள்ளிட்ட, ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள், சுற்றுச்சூழல் அல்லது வன அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
பல அடுக்குகளைக் கொண்ட, இந்த அமைச்சகத்தால், திட்டங்கள் தாமதமாவதுடன் திட்ட மதிப்பீடும் உயர்ந்து வருகிறது. அனைத்து திட்டங்களுக்கும், ஒற்றைச்சாளர முறையை பின்பற்றினால் பயனுள்ளதாக இருக்கும்.
15 மீ., முதல் 18.3 மீ., உயரமுள்ள கட்டடங்களுக்கு, மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஒருங்கிணைப்பு தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தேசிய தலைவர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் ஜான்பால், கோவை மைய தலைவர் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.