திருப்பூர்;திருப்பூர் நகரப் பகுதியில் பிரதான மற்றும் குறுக்கு ரோடுகளில் முறையற்ற வகையில் உள்ள கேபிள்கள் ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட, 3 லட்சம் கட்டடங்கள் உள்ளன.
இவற்றுக்கு டிவி, இணைய தளம், தொலை தொடர்பு இணைப்பு ஆகியன கேபிள் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற கேபிள்கள் ஆங்காங்கே, மின்கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், பிரத்யேக கம்பங்கள் என பல வகையில் கொண்டு செல்லப்படுகிறது.
முறையாக அமைக்கப்படாத கேபிள்கள் ஆங்காங்கே ரோடுகளின் குறுக்கில் தொங்குவது, அறுந்து விழுந்து கிடப்பது போன்ற பல தொல்லைகள் உள்ளன.
இதற்கு தீர்வு காணும் விதமாக கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகம், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது. அவ்வகையில் பல்லடம் ரோடு பகுதியில் கேபிள்கள் முறையாக அமைக்கும் விதமாக பணி நடந்தது. இருப்பினும் பெரும்பாலான கம்பங்களில், கேபிள்கள் சுருட்டி தொங்க விடப்பட்டுள்ளது. இவையும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளது.
மேலும், பிற பிரதான ரோடுகள் மற்றும் குறுக்கு வீதிகளிலும் இவை முறைப்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும்.
இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது: சமீபத்தில், சரக்கு வாகனத்தில் கேபிள் சிக்கி, அவை இணைக்கப்பட்ட மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதனால், கேபிள்கள் முறைப்படுத்துவது குறித்து முதல் கட்ட ஆலோசனை மாநகராட்சியில் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், கேபிள் முறைப்படுத்தும் பணியை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இப்பகுதியில் செயல்படும் 5 பிரதான நிறுவனங்கள் நடப்பு வாரத்தில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இக்கூட்டத்தில் பிரதான ரோடுகள் மட்டுமின்றி குறுக்கு வீதிகளில் செல்லும் கேபிள்கள் ஒழுங்குபடுத்தும் விதமாக அறிவுரை வழங்கப்படும். பயன்பாட்டில் இல்லாத கேபிள்கள் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.