ஈரோடு, மணல்மேடு, குமாரசாமி இரண்டாவது வீதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சந்தியா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு மாணவி. சூரம்பட்டி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன், 21. கடந்த, 9ம் தேதி மாலை, வீட்டருகே இருவரும் பேசி கொண்டிருந்தனர். இதை பார்த்த தாய் பூங்கொடி, மகளை கண்டித்தார். சிறிது நேரம் கழித்து வீட்டில் மகளை காணவில்லை. கல்விச் சான்றிதழ்களுடன் காணாமல் போய் விட்டார். இது குறித்து சூரம்பட்டி போலீசில் பூங்கொடி புகார் செய்தார்.
இதற்கிடையே நேற்று தன் குடும்பத்தினருடன் வந்து, எஸ்.பி., சசி மோகனிடம், பூங்கொடி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: என் மகள் சந்தியாவை, காதல் என்ற பெயரில் கடத்தி சென்ற அலாவுதீன், திருட்டு, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர். மகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்து விடுவார் அல்லது கொலை செய்து விடுவார் என அஞ்சுகிறோம். மகளை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காதல் என்ற பெயரில் அப்பாவி பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் செயல் 'லவ் ஜிகாத்' என அழைக்கப்படுகிறது. இந்த ரீதியில், இந்த வழக்கில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
திருமணத்திற்கு பெண் கேட்ட தகராறில் வாலிபர் பலி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சேர்ந்தவர் பேச்சியம்மாள் 50. இவரது கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். மகள் நாகம்மாளுக்கு திருமணம் முடிந்து விட்டது. மகன் நாகபிரபுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். பேச்சியம்மாள் தம்பி கருப்பசாமியின் மூன்றாவது மகளை, தனது மகனுக்கு பெண் கேட்டுள்ளார். இதற்கு கருப்பசாமி மறுத்துவிட்டார்.
இப்பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் பேச்சியம்மாள் மகள் நாகம்மாவை,கருப்பசாமி கம்பால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். இதை தட்டி கேட்ட நாகபிரபுவையும் தாக்கியுள்ளார். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு நாகபிரபு இறந்தார். சம்பவம் தொடர்பாக ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை வாங்குவது போல நடித்து 134 கிராம் 'அபேஸ்'
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெரிய கடை தெருவில் பாபு என்பவர், திருமலை பாலாஜி என்ற பெயரில் நகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், டூ - வீலரில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இருவர், தங்க நகைகள் வாங்குவது போல, கடை உரிமையாளரிடம் விசாரித்தனர்.
பின், உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, கல்லா பெட்டியில் இருந்த தங்க மோதிரம் உட்பட 134 கிராம் தங்க நகைகளை 'நைசாக' திருடி வெளியேறினர். அவர்கள் சென்ற பின், கடையில் உள்ள 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்த பாபு, நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நகை வாங்குவது போல நடித்து திருடிய மர்ம நபர்களை கும்பகோணம் கிழக்கு போலீசார் தேடுகின்றனர்.
ஆசிரியை கொலை; உறவினர் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாட்டை சேர்ந்த ரஸ்கின்டிரோஸ் மனைவி மெட்டில்டா 53. இவர் குலசேகரபட்டினம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். ரஸ்கின்டிரோஸ் மும்பையில் வசிக்கிறார். ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது மெட்டில்டா கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர். மெட்டில்டாவின் உறவினர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெயதீபக் 37. ஆசிரியை வீட்டுக்கு வந்த ஜெயதீபக் அவரிடம் ரூ.25000 கேட்டார். பணம் தர மறுத்ததால் ஆசிரியையை அவர் கொலை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
'சஸ்பெண்ட்' செய்ததால் போலீஸ்காரர் தற்கொலை
சென்னை,ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தேவி நகரைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம், 32; திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், ரோந்து வாகன ஓட்டுனராக பணியாற்றினார். இவரது மனைவி திலகவதி, 28, இரு மகன்கள் உள்ளனர். கடந்த 5ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில், ஆவடி அண்ணா சிலை அருகே, ஆய்வாளர் முருகேசனுடன் ரோந்து வாகனத்தில் சென்றார்.
![]()
|
அப்போது, ஆவடி 'வாட்டர் டேங்க்' அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் லேசான காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி, வள்ளிநாயகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், நேற்று காலை 11:00 மணியளவில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தந்தையை கொன்ற மகன், பேரன் கைது
திருப்பூர் மாவட்டம், காங்கயம், மீனாட்சி வலசை சேர்ந்தவர் பொன்னுசாமி, 82; விவசாயி. கடந்த 20ம் தேதி வீட்டில் துாக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். தற்கொலை வழக்குப் பதிந்து, காங்கேயம் போலீசார் விசாரித்தனர். பொன்னுசாமியின் மகள் மணி, 60, தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். பொன்னுசாமியின் மகன் நடராஜ், 57, பேரன் சரவணன், 25 ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, மகளுக்கும் சொத்து வழங்க வேண்டும் என தந்தை கூறியதால், அவரை கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டனர். இதனால், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, மகன் நடராஜ் மற்றும் அதற்கு துணையாக இருந்த பேரன் சரவணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
![]()
|
மாமனிடம் பெண் கேட்ட மருமகன் அடித்துக்கொலை
தேனி மாவட்டம், தெப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள், 50. இவரது கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். மகள் நாகம்மாளுக்கு திருமணம் முடிந்து விட்டது. மகன் நாகபிரபு, 27, என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார். பேச்சியம்மாள் தம்பி கருப்பசாமியின் மூன்றாவது மகளை, தன் மகனுக்கு பெண் கேட்டார்; கருப்பசாமி மறுத்தார்.
இப்பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பேச்சியம்மாள் மகள் நாகம்மாவை, கருப்பசாமி நேற்று கம்பால் தாக்கினார். அதை தட்டி கேட்ட நாகபிரபுவையும் கடுமையாக தாக்கினார். காயமடைந்த இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு, நாகபிரபு இறந்தார். ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் 4 வது தெருஏலக்காய் வியாபாரி பாலசுப்பிரமணியன் மனைவி வெண்ணிலா 72. இவர் நேற்று காலை இங்கு 5வது தெருவில் உள்ள மகன் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து வந்தார். பின்தொடர்ந்து வந்த இருவர் வெண்ணிலாவை வழிமறித்து, 'தங்களை போலீஸ் அதிகாரிகள். ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளோம்,' எனக்கூறி நம்ப வைத்துள்ளனர்.
அப்போது 'அதிகமாக நகை போட்டு தெருவில் சென்றால் திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள் என்று கூறி வெண்ணிலா அணிந்திருந்த 12 பவுன் தங்க தாலி செயின், கையில் அணிந்திருந்த 2 பவுன் வளையல்களையும் கழற்றி பேப்பரில் மடித்து பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் 'என கூறி பேப்பரையும் வழங்கினர். இதனை நம்பிய மூதாட்டியிடம் நகைகளை பேப்பரில் மடித்து தருவது போல் போக்கு காட்டி ஏற்கனவே தயாராக மடித்து வைத்திருந்த காகித பொட்டலத்தை கொடுத்து விட்டு நகையுடன் இருவரும் தப்பினர். வீட்டிற்கு வந்த மூதாட்டி பொட்டலத்தை பிரித்த போது அதில் கற்களையும், பித்தளை செயினையும் வைத்து ஏமாற்றியது தெரிந்தது. போடி போலீசார் விசாரிக்கின்றனர்.
தங்கச்சங்கிலி பறித்த மின் ஊழியர் போலீசிடம் சிக்கியதும் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், நேசமணிநகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஜோசபின் தாமஸ், 60. இவர், மே 9 காலை 8:45 மணிக்கு வெயிலுக்கு குடை பிடித்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் ெஹல்மெட் அணியாமல் வந்த நபர் அவரது குடையை இழுத்தார். ஜோசபின் தாமஸ் திரும்பி பார்க்க முயன்ற போது, அவரது கழுத்தில் கிடந்த, 2.5 சவரன் தங்கச்சங்கிலியை அறுத்து தப்பினார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கட்டையன்விளையைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் சாந்தகுமார், 52, என்பவர் தங்கச்சங்கிலியைப் பறித்தது தெரிந்தது.
பரமார்த்தலிங்கபுரத்தில் நண்பர்களுடன் அவர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்றனர். போலீசாரைக் கண்டதும், அவர்கள் பிடியில் சிக்காமல் இருக்க, மறைத்து வைத்திருந்த விஷ மாத்திரையை சாந்தகுமார் தின்றார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். போதை மற்றும் சீட்டு விளையாட அதிக அளவில் கடன் வாங்கி, அதை அடைக்க குறுக்கு வழியில் அவர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
![]()
|
பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு
சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில், நேற்று முன் தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மிக குறைந்த சக்தி உடைய குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஜெர்மனியில் குண்டுவெடிப்பு
ஜெர்மனியின் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் உள்ள ராடிங்கன் நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு திடீரென குண்டு வெடித்தது. இதில், இரண்டு போலீசார், 10 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். பல மணி நேரம் எரிந்த தீயில் இருந்து சடலம் ஒன்றும் மீட்கப்பட்டது. இதையடுத்து, குடியிருப்பில் இருந்த 60 வயது நபரை சந்தேகத்தின்பேரில், போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.