புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி:
'திராவிட மாடல் என்ற தி.மு.க.,வின் கோஷம், ஒரே இந்தியா என்பதற்கு எதிரானது' என்ற கவர்னர் ரவியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சிந்தனையை விதைக்கவே, திராவிட மாடல் என, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் திரும்ப திரும்பக் கூறி வருகின்றனர்.
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
தமிழகத்தில், மதுவை ஒழிப்பது சம்பந்தமாக, முதல்வர் ஸ்டாலின் உறுதியான கருத்தைக் கொண்டிருக்கிறார். எந்த சீர்திருத்தத்தையும், படிப்படியாகவே கொண்டு வரமுடியும். ஒரே அடியாக அனைத்து சீர்திருத்தங்களையும் புகுத்தினால், நாட்டின் பட்ஜெட் மட்டுமல்ல, அரசாங்க நடைமுறைகளும் சீர்குலையும்.
சோவியத் யூனியனில் சீர்திருத்தம் என்ற பெயரில் முன்னாள் அதிபர் கார்ப்பச்சேவ், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அமல்படுத்தினார். அதனால், சோவியத் யூனியன் என்ற அமைப்பே சிதறிப் போனது. தமிழகத்தில் அந்த நிலை வரக்கூடாது என்று தான், முதல்வர் விரும்புகிறார்; நாங்களும் விரும்புகிறோம்.
![]()
|
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
சென்னை பெருநகர மாநக ராட்சி பகுதிகளில், நகர பஸ்கள் சேவையை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இதுவே, ஈடில்லா ஆட்சிக்கு சாட்சியாகவும் அமைந்திருக்கிறது. சாதனை விளம்பரத்தில் கண்ட, புதுப்பித்த பஸ்களும், புதிதாக வாங்கிய பஸ்களும், எங்கே என கேட்கத் தோன்றுகிறது.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரிக்கு இடம் இல்லாத காரணத்தால், பல்கலை கொடுத்த, 25 புத்தம் புது கணினிகள், பல மாதங்களாக பிரித்துக் கூட பார்க்கப்படாத நிலையில் உள்ளன. பரிசோதனை கூடங்களே இல்லாத நிலையில், பரிசோதனை தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அரசு கல்லுாரி மாணவர்கள், எந்த அளவுக்கு அலட்சியப்படுத்தப்படுகின்றனர் என்பதையே, இது உணர்த்துகிறது.