திருப்புவனம்--திருப்புவனம் வட்டாரத்தில் பருவ நிலை மாற்றத்தால் தென்னை மரங்களில் பரவி வரும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விஞ்ஞானியின் செயல் விளக்க முகாம் லாடனேந்தலில் நடந்தது.
திருப்புவனம் வட்டாரத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் சமீப காலமாக வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் தென்னை மட்டைகளில் உள்ள பச்சை நிறம் மாறி மட்டைகள் காய்ந்து உதிர்வதுடன் தேங்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் எந்த மருந்து தெளித்தாலும் கட்டுப்படுவதில்லை. இதனை தொடர்ந்து எளிய முறையில் வெள்ளை ஈ க்களை கட்டுப்படுத்த செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் விஜயலட்சுமி தலைமையில் செயல் விளக்க முகாம் லாடனேந்தலில் தென்னை விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.
டாக்டர் விஜயலட்சுமி பேசுகையில்: குறைந்த செலவில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம், மைதா மாவை தண்ணீரில் கலந்து ஸ்பிரேயர்கள் மூலம் அதிவேகத்தில் மட்டைகளின் கீழ்புறத்தில் தெளிப்பதன் மூலமும், எளிதில் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்.
செயல் விளக்க முகாமில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுந்தரமகாலிங்கம், துணை வேளாண் அலுவலர் முனியசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன், உதவி தொழில் நுட்ப மேலாளர் நந்தினி மற்றும் விவசாயி தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.