ஓட்டுப்பதிவுக்கு முன் எடுத்த கருத்துக் கணிப்புகளுக்கும், ஓட்டுப் பதிவுக்கு பின் உலாவும் தகவல்களும், தங்கவயலின் நகரம், கிராமப் பகுதிகளில் பா.ஜ.,வுக்கு சாதகமாக இல்லை என்பது, அக்கட்சியின் உண்மை தொண்டர்களிடையே, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வேட்புமனு தாக்கலின் போது, காங்கிரசை மிஞ்சிய வகையில் சவால் காட்டிய பா.ஜ., ஓட்டுப்பதிவின் போது, நகரப் பகுதியில், 'டல்லாக' தெரிந்தது.
பரவலான ஓட்டுச் சாவடி பகுதிகளில், ஓட்டுகளை பதிவு செய்ய வைத்ததுடன், தங்கள் பணி முடிந்ததாக, பலரும் கருதியதாக தெரிகிறது.
காங்கிரஸ் தரப்பில், 1.25 லட்சம் பேரை, நன்கு கவனித்ததாக தெரிகிறது.
இதில், 70 சதவீதம் பேர் ஓட்டளித்திருந்தாலே 'ரிசல்ட்' சாதகமாகும் என்ற கணக்கில் குஷியாக இருக்கின்றனர்.
இவர்களுக்கு நகரம், கிராமம் என இரு தரப்பிலும், கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என, நம்புகின்றனர்.
ஆனால், மற்றொரு கட்சி ஓட்டுகள், நகரில் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன; கிராமத்தில் இவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. நகரத்தில் காட்டிய அக்கறையை கிராமத்தில் காண்பித்திருந்தால், புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
கிராமத்தில், பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் போட்டி இருந்தது. நகரில் மட்டும் பா.ஜ., சோபிக்கவில்லை.
இத்தொகுதியில், 2018ல், 64 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. ஆனால், தற்போது நடந்த ஓட்டுப் பதிவில், 73.71 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதுவரை நடந்த சட்டசபைத் தேர்தல்களில் இதுவே அதிகம். ஓட்டுப் பதிவு அதிகமானதற்கு, தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு காரணமாகும்.
இருந்தாலும், அரசியல் கட்சிகள், தங்களின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களை வீடுவீடாக சென்று அழைத்ததன் முயற்சியே, 73.71 சதவீதமாக பதிவானது. அத்துடன், அரசியல் கட்சிகளின் பணபலமும், ஜனநாயக திருவிழாவை, களைகட்ட வைத்தது என்பதே நிதர்சனமான உண்மை
\- நமது நிருபர் -
.