பெங்களூரு-ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, சந்தேகம் எழுப்பிய காங்கிரசுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்க கடிதம் எழுதி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பேட்'கள் இதற்கு முன்பு, தென் ஆப்ரிக்க நாட்டில் பயன்படுத்தப்பட்டதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
'அங்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவி பேட்'களை மறுமதிப்பீடு செய்யாமல், இங்கு பயன்படுத்துவது கவலை அளிக்கிறது' என, கடந்த 8ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, காங்கிரஸ் கடிதம் எழுதி இருந்தது.
இந்த கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு, நேற்று தேர்தல் கமிஷன் அனுப்பிய கடிதம்:
'எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்' நிறுவனம் தயாரித்த, புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தென் ஆப்ரிக்காவில் பயன்படுத்தியதை எடுத்து வந்ததாக, குற்றம் சாட்டி உள்ளீர்கள்.
இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவதற்கு முன், ஆதாரங்களை வெளியிட வேண்டும். நாம் பயன்படுத்திய இயந்திரங்களை, தென் ஆப்ரிக்கா பயன்படுத்தாது என்பதால், அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.