பெங்களூரு,-''இம்முறை 31 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முன்னிலை வகித்து, தேர்தலில் வெற்றி பெறுவோம்,'' என பா.ஜ., தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ் தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து, சில ஆய்வு முடிவுகளில், காங்கிரஸ் பெரும்பான்மை வரும் என்றும்; சில ஆய்வுகள் தொங்கு சட்டசபை அமையும் என்றும்; சில ஆய்வுகள் பா.ஜ., பெரும்பான்மை பெறும் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் கூறியதாவது:
பல லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வௌியான கருத்து கணிப்புகள் பொய்த்து விட்டன. கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், 24 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முன்னிலை வகித்தது.
இம்முறை 31 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் முன்னிலை வகித்து, வெற்றி பெறுவோம். நீங்கள் கொடுத்துள்ள எண்கள், உங்கள் யூகங்கள் மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.