சென்னை : மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட நுரையீரல், கோவையிலிருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்துக்குள் கொண்டு வரப்பட்டு, முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், 78 வயது முதியவர் ஒருவர், நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 'எக்மோ' போன்ற உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்த நிலையில், நுரையீரலை தானமாகப் பெற அவர் காத்திருந்தார்.
இந்நிலையில், கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
அதில், நுரையீரல் தானமாகப் பெறப்பட்டு சென்னை, எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கு, ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மற்றும் சிறப்பு வாகனம் வாயிலாக, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, முதியவருக்கு பொருத்தப்பட்டது.