சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட மரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதற்காக தேரை கோவில் முன் நிறுத்தி மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்தனர். தொடர்ந்து சிறப்பு யாக பூஜை செய்து அதில் வைத்து பூஜித்த புனிதநீரை தேருக்கு தெளித்து புனிதப்படுத்தினர்.
பின் பூரண கும்ப கலசத்தை தேர் மீது வைத்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே, 'கோவிந்தா' கோஷம் முழங்க இழுத்துச்சென்று மீண்டும் கோவிலை அடைந்தனர்.
நுாற்றாண்டு விழா
இக்கோவிலில், 3 நாள் நடக்க உள்ள நுாற்றாண்டு விழா, இன்று காலை கோ பூஜையுடன் தொடங்கும். முதல் நாள் நிகழ்ச்சியாக காலை, 8:00 முதல் இரவு 8:00 மணி வரை, 'ஏக தின' லட்சார்ச்சணை, சாற்றுமுறை, ஏகாந்த சேவை உள்ளிட்டவை நடக்கிறது. நாளை, 108 கலச ஸ்தாபனம் செய்து திருமஞ்சனம் நடத்தப்படும். இரவு சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை நடக்க உள்ளது. 14ல் தோமாலை, திருப்பாவை சாற்றுமுறை, நவகலச திருமஞ்சனம், 'அன்னப்பாவாடை' உற்சவத்துடன் நுாற்றாண்டு விழா நிறைவு பெறும்.