காயம்பட்டு தவித்த
ஆந்தைக்கு சிகிச்சை
வெள்ளகோவிலில், காயம்பட்டு தவித்த ஆந்தை மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெள்ளகோவிலில், வள்ளியரச்சல் ரோடு, சிவக்குமார் நகர் பகுதியில், அடி பட்டு பறக்க முடியாத நிலையில் மிகப்பெரிய ஆந்தை தவிப்பதாக, வெள்ளகோவில் விலங்குகள் நல அமைப்பான அன்பு தேசம் அறக்கட்டளைக்கு தகவல் போனது. அங்கு சென்ற அவர்கள், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய மீட்பு துறையினர் உதவியோடு மீட்டனர். வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். காங்கேயம் வன காவலர் ராஜேஸ்வரி பார்வையிட்ட நிலையில், வட்டமலை கரை அணை பகுதியில், ஆந்தை விடப்படும் என தெரிவித்தார்.
67 திருநங்கைகளுக்கு
ஓய்வூதியம் வழங்கல்
தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்து அடையாள அட்டை, தனியாக ரேஷன் கார்டு, சுய தொழில் துவங்க மானிய தொகை, சுய உதவிக்குழு பயிற்சி, காப்பீடு திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தவிர, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம், 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த, பிப்., முதல், 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல், 67 பேருக்கு, 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலைவாழ் மாணவருக்கு
கோடை கல்வி முகாம்
கடம்பூர் மலை பகுதியில் பழங்குடி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பரண் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், ௧ம் தேதி முதல், 10ம் தேதி வரை கோடை கால கல்வி முகாம் நடந்தது. இதில் புதிய பயிற்சி, எழுத்து உருவாக்கம், திறன் வளர்ப்பு, கலைத்திறன், தலைமைத்துவம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. பரண் மைய இயக்குனர் கென்னடி தலைமை வகித்தார். பயிற்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பசுவனாபுரம், குரும்பூர், குஜ்ஜம்பாளையம்,குன்றி, மாக்கம்பாளையம், அணில் நத்தம், உகினியம் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
கொடிவேரிக்கு வந்தவர்
இறப்பால் பரபரப்பு
கொடிவேரி தடுப்பணைக்கு வந்த பயணி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னுாரை சேர்ந்தவர் தமீம், 51, கூலி தொழிலாளி; நண்பர்களுடன் கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று முன்தினம் வந்தார். ஆனால், தடுப்பணைக்கு செல்லாமல் தமீம் காரில் படுத்திருந்தார். அவருடன் வந்த நண்பர்கள், தடுப்பணையில் குளித்துவிட்டு வந்து பார்த்தபோது, பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதனால் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். தமீம் சகோதரர் முகமது பீலால் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இ.கம்யூ., நடைபயணம்
மத்திய அரசை கண்டித்து, இந்திய கம்யூ., கட்சி சார்பில், சென்னிமலையில் நடைபயண பிரசாரம் நடந்தது. மாவட்டக் குழு உறுப்பினர் பொன்னுசாமி தலைமையில், கட்சி அலுவலகத்தில் துவங்கிய நடைபயணம் பி.ஆர்.எஸ்.,ரோட்டில் தொடங்கி, பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. மத்திய அரசு மக்கள் விரோத போக்கில் செயல்படுவதாக கூறி கோஷமிட்டு சென்றனர். இதில் ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் மற்றும பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோபியில் வாழைத்தார்
ரூ.5.24 லட்சத்துக்கு ஏலம்
கோபியில், 5,140 வாழைத்தார், 5.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 21 ரூபாய், நேந்திரன், 20 ரூபாய்க்கும் விற்றது. பூவன் மற்றும் ரஸ்த்தாளி தார், தலா 400 ரூபாய், தேன்வாழை, 430, செவ்வாழை, 550, ரொபஸ்டா, 300, பச்சைநாடான், 310, மொந்தன், 240 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 5,140 வாழைத்தார்களும், 5.24 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தாண்டாம்பாளையத்தில்
சிதிலமடைந்த நிழற்கூடம்
சத்தி அருகே சிதிலமடைந்த நிழற்கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த இக்கரை நெகமம் ஊராட்சி தாண்டாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்கூடம் உள்ளது. கட்டி, ௧௦ ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சிதிலமடைந்து சிமென்ட் காரை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்பதால், பயணிகள் இங்கு நிற்பதில்லை. இடிந்து விழும் முன் நிழற்கூடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக நிழற்கூடம் கட்ட, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பியூர் தாசில்தார்
திடீர் இடமாற்றம்
நம்பியூர் தாசில்தாராக மாலதி நியமிக்கப்பட்டுள்ளார். கோபி தாலுகா அலுவலகத்தில், சமூக நலத்திட்ட தாசில்தாராக பணிபுரிந்த நிலையில், நம்பியூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் நம்பியூர் தாசில்தாராக பணிபுரிந்த பெரியசாமிக்கு எதிராக, கடந்த சில நாட்களாக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வி.ஏ.ஓ., சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதான் காரணமா அல்லது வேறு விவகாரமா என்பது, மாவட்ட நிர்வாகத்துக்கே தெரியும் என்று, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
நீச்சல் தெரியாததால்
தொழிலாளி சாவு
சத்தி அருகே நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
புளியம்பட்டி அருகேயுள்ள நீலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 25; அரசூர் படித்துறையில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் இறங்கினார். ஆனால், மீண்டும் கரைக்கு திரும்பவில்லை. அவருடன் சென்றவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆனந்த்ராஜ் சடலம் நேற்று கரை ஒதுங்கியது. சத்தி போலீசார் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
தாராபுரம் மேற்கு ஒன்றிய பா.ஜ., கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் மங்களம் ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாராபுரம் மேற்கு ஒன்றிய கூட்டுறவு பிரிவு தலைவராக ரத்தினசாமி, துணை தலைவர்களாக பிரவீன்குமார், சதாசிவம்; செயலாளர்களாக லோகநாதன், கணேசன், பால மணிகண்டன், ராஜமாணிக்கம், கார்த்திக், குமாரசாமி, கவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு குறைந்த
மாடுகள் வரத்து
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்காக அழைத்து வந்திருந்தனர். 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 50,000 ரூபாய் மதிப்பில், 300 எருமைகள், 25,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர். கால்நடை வரத்து குறைந்ததால், வியாபாரமும் மந்தமாக இருந்தது.
துாக்கில் பெண் தற்கொலை
அத்தை வீட்டுக்கு செல்ல கணவன் அனுமதி தராததால், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஆசனுார் அருகே முதியனுாரை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரின் மனைவி ஜோதி, 25; ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். ஒரு வாரமாக தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அத்தை வீட்டுக்கு நேற்று செல்ல ரங்கராஜனிடம், ஜோதி நேற்று அனுமதி கேட்டார்.
ஆனால், அவர் மறுத்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி, கணவன் வேலைக்கு சென்ற பின், வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலின்படி சென்ற ஆசனுார் போலீசார் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.
தாராபுரத்தில் காற்றுடன்
கொட்டிய கனமழை
தாராபுரத்தில், காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், மின்சாரம் தடைபட்டது.
தாராபுரம் நகரில், நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இரவு, 8:30 மணியளவில் நகரில் சூறைக்காற்று வீசியது. சில நிமிடங்களில் லேசான துாறலாக மழை பெய்ய துவங்கியது. பின் வேகமெடுத்து, கனமழையாக மாறியது. ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் வேலை முடிந்து விடு விரும்பிய வாகன ஓட்டிகள், கடும் அவதிக்குள்ளாகினர். பலத்த காற்றால் நகரில் ஆங்காங்கே மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் தவித்துப்போயினர். தாராபுரத்தில் சர்ச் ரோட்டில் நின்ற கார் மீது, பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்ததில், கார் சேதம் அடைந்தது.
நாளை 10 இடங்களில்
ரேஷன் குறைதீர் முகாம்
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் நாளை, 10 தாலுகாவிலும் நடக்கிறது.
இதில் ரேஷன் அட்டை பெற மனு வழங்குதல், நகல் குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம். தாலுகா வாரியாக தலா ஒரு கிராமத்தில், ரேஷன் கடையில் இம்முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ஈரோடு தாலுகா - மரப்பாலம் சாலை -1 ரேஷன் கடை, பெருந்துறை - காடபாளையம், மொடக்குறிச்சி - குளூர், கொடுமுடி - வேலாயுதம்பாளையம், கோபி - கொளப்பலுார், நம்பியூர் - கூடக்கரை, பவானி - புன்னம்-2, அந்தியூர் - பர்கூர் 1, சத்தியமங்கலம் - சிக்கரசம்பாளையம், தாளவாடி - கல்மண்டிபுரம் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.