வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தேர்தலின் போது மக்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என உத்தவ் தாக்கரே நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று(மே 12) உத்தவ் தாக்கரே கூறியதாவது: நாம் தேர்தலில் சந்திப்போம். இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவு செய்யாவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். நான் ராஜினாமா செய்தது போல், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதைய கவர்னரின் சட்டவிரோத முடிவால் ஷிண்டே ஆதாயம் பெற்றாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சபாநாயகர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் செல்வோம்; தேர்தலை எதிர்கொள்வோம்.

உலகம் முழுவதும் மஹாராஷ்டிராவின் பெயர் இழுக்கப்படுகிறது. அதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கருத்தைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா முன்னாள் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இது போன்ற சட்டவிரோத காரியங்களை எதிர்காலத்தில் யாரும் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.