புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே, மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதோடு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கருக்காக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 45. இவரது மனைவி கவிதா, 40. இவரது அக்கா கணவர் பாலசேகர், 55, திருச்சியில் வசிக்கிறார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
துணிக்கடை துவங்க பாலசேகரிடம் கவிதா பணம் வாங்கி இருந்தார். பணத்தை திரும்பிக் கேட்டதால், கவிதாவுக்கும், பாலசேகருக்கும் விரோதம் ஏற்பட்டது. கடந்த 10ம் தேதி இரவு கவிதா வீட்டின் மீது பாலசேகர் பெட்ரோல் குண்டு வீசினார். அதில், கவிதாவின் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது.
பதறியடித்து வெளியே வந்த கவிதாவை நோக்கி, கைத்துப்பாக்கியால் பாலசேகர் சுட்டார். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலசேகரும் அவருடன் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கவிதா கொடுத்த புகாரின்படி, வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து, பாலசேகரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.