காஞ்சிபுரம்:'பிளாஸ்டிக்' பயன்பாடு குறைக்கும் விதமாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை, கலெக்டர் ஆர்த்தி நேற்று துவக்கி வைத்தார்.
பத்து ரூபாய் அல்லது நாணயமாக இயந்திரத்தில் செலுத்தினால், மஞ்சப்பையை தானாகவே வழங்கும் விதத்தில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் பிரகாஷ், கோவில் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:
ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவற்றில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்த, மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மஞ்சப்பை இயந்திரங்கள் நிறுவப்படும். பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.