காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. காமராஜர் வீதியில் இருந்து பல்லவர் மேடு கிழக்கு, மேற்கு பகுதிக்கு செல்வோர் பத்ரகாளியம்மன் கோவில் வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக வழிந்தோடும் கழிவு நீர், பத்ரகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவரையொட்டி சென்றதால், பக்தர்கள் முகம் சுளித்தபடியே சென்றனர். மேலும், வீடுகளையொட்டி கழிவு நீர் செல்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கப்பட்டு சீரமைக்கப்ட்டது.