திருத்தணி:திருவலாங்காடு ஒன்றியம், அருங்குளம் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருபவர் சரண்யா, 38. இவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவரின் கணவர் முரளி, 45. அ.தி.மு.க., பிரமுகர்.
இவர், தன் மனைவிக்கு பதில், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும், சில மாதங்களாக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
வாக்குவாதம்
இந்நிலையில், கடந்த 1ம் தேதி நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஒருவருக்கும், முரளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், இருதரப்பினர் இடையே சமரசம் செய்ய முயற்சித்தார்.
அதற்கு, ஊராட்சி தலைவரின் கணவர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் ரகுவரனை தரக்குறைவாக பேசியும், கிராம சபை கூட்ட தீர்மான புத்தகத்தில் கையெழுத்திடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், ஊராட்சி செயலரிடம் இருந்த தீர்மான புத்தகத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
மேலும், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றுகள், உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்யும் மனுதாரர்களின் வீட்டிற்கு, கிராம நிர்வாக அலுவலர் விசாரணைக்கு செல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார்.
புகார்
இதையடுத்து, அருங்குளம் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், கனகம்மாசத்திரம் போலீசில், ஊராட்சி தலைவரின் கணவர் முரளி மீது புகார் அளித்தார்.
புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று, ஊராட்சி தலைவரின் கணவரும், அ.தி.மு..க, பிரமுகருமான முரளியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.