பெங்களூரு:கே.டி.எம்., இந்தியா பைக் நிறுவனம், மே 27 முதல் ஜூன் 8ம் தேதி வரை, அதன் முதல் சர்வதேச சாகச பயணத்தை அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் துவங்கி நேபாளத்தின் அப்பர் மஸ்டாங் பகுதி வரை சென்று, திரும்பவும் கோரக்பூருக்கு வருவது தான் இந்த பயணம்.
இந்த 13 நாள் பயணத்தில், கிட்டத்தட்ட 1500 கி.மீ., வரை பைக் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. சாகசத்திற்கு என்றே தயாரிக்கப்பட்ட கே.டி.எம்., அட்வெஞ்சர் பைக் வாடிக்கையாளர்கள் மட்டுமே, இதில் கலந்து கொள்ள முடியும்.
இந்த பயணத்தின் போது, இமயமலையில் உள்ள தொலைதுாரப் பகுதிகள், கரடுமுரடான பாதைகள், மூச்சடைக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் மற்றும் ஆழமான திபெத்திய புத்த பாரம்பரியம் ஆகியவற்றைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஆபத்தான மலைப் பாதைகள், சேற்றுப் பாதைகள், மிரள வைக்கும் திருப்பங்கள் என பல்வேறு அனுபவங்களையும் பெற முடியும்.
இந்த சாகச பயணத்தில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு, அப்பர் மஸ்டாங் பகுதியில் நல்ல அனுபவம் கொண்ட ஓட்டுனர்கள் அறிவுரைகளை வழங்குவர். இதர தகவல்களை கே.டி.எம்., வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.