பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கண்ணப்பன் நகர் அருகே, கம்பத்தில் உள்ள மின்சார பெட்டி திறந்த நிலையில் கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகரப்பகுதிகளில், மின்சார வசதிக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட மின்சார பெட்டி கதவுகள் முறையாக மூடப்படாமல் உள்ளது. அதில், கண்ணப்பன் நகர் அருகே உள்ள மின்சார பெட்டியில் கதவு மூடப்படாமல் திறந்த நிலையில் கிடக்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்புகள் நிறைந்த பகுதியான கண்ணப்பன் நகர் ரோட்டில், மின்சார பெட்டி திறந்த நிலையில் கிடப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக மின் பெட்டியை மூட வேண்டும். இதுபோன்று நகரப்பகுதிகளில் பழுதடைந்த மின்பெட்டிகளின் கதவுகளை சரி செய்து விபத்துக்களை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.