உடுமலை:வேளாண் பணிகளுக்கு வேலை உறுதி திட்டப்பணியாளர்களை நியமிப்பதில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும் என, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அரசு கட்டமைப்பு, ரோடு சீரமைப்பு, தடுப்பணை கட்டுவது, பாத்தி கட்டுதல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட விவசாயப்பணிகளிலும் நியமிக்கப்படுகின்றனர்.
நடப்பு நிதியாண்டு முதல், வேளாண் பணிகளில் வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் நியமிப்பதில் அரசு புதிய நடைமுறையை செயல்படுத்தியுள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே, வேலை உறுதி திட்டப்பணியாளர்களை வேளாண் பணிகளுக்கு ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அதிலும் சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. விவசாயிகள், அவர்களின் விளைநிலம் இருக்கும் ஊராட்சியில், இருப்பிட பதிவும் இருந்தால் மட்டுமே வேலை உறுதி திட்டப்பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைக்கு விவசாயிகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இங்குள்ள பல ஊராட்சிகளில், விவசாயிகளின் இருப்பிட பதிவு ஒருபக்கமும், அவர்களின் விளைநிலம் வேறு ஊராட்சிக்குட்பட்டதாகவும் இருக்கிறது.
இதனால், தற்போது வேளாண் பணிகளுக்கு வேலைஉறுதி திட்டத்தினரை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் வேலை உறுதி திட்டப்பணியாளர்களுக்கும், அன்றாடம் பணிகளை சுலபமாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், வேலை உறுதிதிட்டப்பணியாளர்கள் என இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'இதுகுறித்து தொடர்ந்து மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் முன்வைத்து வருகிறோம். உடுமலை சுற்றுப்பகுதியில் அதிகளவில் இவ்வாறு வேறு வேறு ஊராட்சிகளில் இருப்பதால் வேளாண்மை அதிகளவில் பாதிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளோம்,' என்றனர்.
இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.