வில்லிவாக்கம், நுகர்பொருள் வாணிப கழகத்தின் சொந்த இடமிருந்தும், வில்லிவாக்கத்தில் ஏழு இடங்களில், வாடகை கட்டடங்களில் ரேஷன் கடைகள் இயங்குவதால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் 94வது வார்டில், சிட்கோ நகர் உள்ளது. இங்குள்ள பிரதான சாலைகள் உட்பட மொத்தம், 100 தெருக்களில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, முதலாவது பிரதான சாலையில், உணவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்திற்குச் சொந்தமான காலிமனை உள்ளது.
அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் விட்டதால், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே, இங்கு ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சிட்கோ நகர் மூத்த குடிமக்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் உலக வங்கி உதவியுடன், 40 ஆண்டுகளுக்கு முன், வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதி உருவாக்கப்பட்டது.
அப்போது, அரசு துறை சார்ந்த முக்கிய அலுவலகங்களுக்கும் இங்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அவற்றில் ஒரு இடத்தைத் தவிர, மற்ற அனைத்து இடங்களும் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டன. முதலாவது பிரதான சாலையில் உணவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான இடம் மட்டும், பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.
குறிப்பாக, வில்லிவாக்கத்தில் ரேஷன் மண்டல அலுவலகம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில், தெற்கு மாட விதியில் வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது.
இதற்கு மாதம், 40 ஆயிரம் ரூபாய் வரை வாடகை. அதேபோல், வில்லிவாக்கத்தில் ஏழு இடங்களில் வாடகை கட்டடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
இதற்கு மாதந்தோறும், 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை செலவிடப்படுகிறது.
சொந்த இடம் இருந்தும் முறையாக பயன்படுத்தாததால், பல ஆண்டுகளாக மக்களின் பணம் வீணாகி வருகிறது. தற்போது அங்கு குப்பை கொட்டி, சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது.
விரைவில், காலிமனையை சீரமைத்து, ரேஷன் அலுவலகங்கள் கட்ட, அரசு முன்வர வேண்டும். இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.