- நமது நிருபர் -
'உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த மாம்பழங்களும், சந்தையில் விற்பனைக்கு வரும் நிலையில், எது நல்ல மாம்பழம்' என கண்டறிய முடியாமல் மக்கள் குழம்புகின்றனர். 'இதனால், மாம்பழ வியாபாரம் பாதிக்கும்' என சிறு மற்றும் சாலையோர வியாபாரிகள் புலம்புகின்றனர்.
தற்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை விரும்பி உண்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மரங்களில் இருந்து பறிக்கப்படும் மாம்பழங்கள், இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பின் உண்பதே சிறந்தது; அதுவே உடலுக்கு நன்மை தரும்.
ஆனால், குறுகிய நாட்களில் அதிக வருமானம் சம்பாதிக்கும் பேராசையில், வியாபாரிகள் பலர் ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இரு நாட்களுக்கு முன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், திருப்பூரில் நடத்திய ஆய்வில், 3.5 டன் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,''செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வியாபாரிகள் விற்கக்கூடாது என, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அத்தகைய பழங்களை எப்படி கண்டறிவது என்பது குறித்த பயிற்சியையும் வழங்கியுள்ளோம். அத்தகைய மாம்பழங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும்,'' என்றனர்.
கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்
இதனை தாண்டி, தவறிழைக்கும் கடை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ் வழங்குகின்றனர். இதோடு, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் பணி முடிந்து விடுகிறது.
'இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்; தெரியாம செஞ்சுட்டேன்; ஒரு தடவை மன்னிச்சு விட்றுங்க' என, சம்பந்தப்பட்ட வியாபாரிகளும், அதிகாரிகளிடம் கெஞ்சி, நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
மீண்டும் அவர்கள் அத்தகைய செயலில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இது ஒருபுறமிருக்க தற்போது சாலையோரக் கடைகள், வீதி, வீதியாக செல்லும் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள், அதிகளவில் மாம்பழங்களை விற்கின்றனர்.
அந்த மாம்பழங்கள் நல்லவைதானா, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவையா என்ற குழப்பத்தால், மக்கள் பலரும் அவற்றை வாங்க தயங்குகின்றனர்.
'இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்; தெரியாம செஞ்சுட்டேன்; ஒரு தடவை மன்னிச்சு விட்றுங்க' என, சம்பந்தப்பட்ட வியாபாரிகளும், அதிகாரிகளிடம் கெஞ்சி, நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்