மேல்மருவத்துார்:சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செய்யூர் -- வந்தவாசி -- போளூர் சாலை மேம்பாட்டு பணியை, தலைமைப் பொறியாளர் செல்வன், நேற்று சித்தாமூர், சோத்துப்பாக்கம் பகுதியில் ஆய்வு செய்தார்.
சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலமாக, செய்யூர் -- வந்தவாசி -- சேத்துப்பட்டு - - போளூர் சாலை, மாநில நெடுஞ்சாலை - 115 என, மொத்தம் 109 கி.மீ., நீளமுள்ள சாலையை, இருவழித்தட சாலையாக, 603 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடக்கிறது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 37.027 கி.மீ., நீளமும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 72.246 கி.மீ., நீளமும் அகலப்படுத்தி, மேம்பாடு செய்யப்பட உள்ளது.
இத்திட்ட ஒப்பந்தமானது, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இப்பணியை, 42 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், 5 உயர்மட்ட பாலங்கள், 12 சிறு பாலங்கள், 1 இரயில்வே பாலம், 214 வாய்க்கால் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில், இரண்டு உயர் மட்ட பாலங்களும், 11 சிறு பாலங்கள் மற்றும் 171 வாய்க்கால் பாலங்களும் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தில், வந்தவாசி நகருக்கு 5.89 கி.மீ., நீளத்திற்கும் மற்றும் சேத்துப்பட்டில் 3.59 கி.மீ., நீளத்திற்கும், புதிய புறவழிச்சாலை துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், மருதாடு கிராமத்தில் சாலை வளைவுகளை சரிசெய்ய, 2.22 கி.மீ., நீளத்தில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில், சாலையின் தரத்தையும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலைப் பணியை ஒப்பந்த காலத்துக்குள் விரைந்து முடிக்கவும், ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.